Friday, December 24, 2010

உண்மை இந்தியன்

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச்
சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார். ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு
கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா? துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.

அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது. எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.

இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.
“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன் கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்காங்க. இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது. சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு. 2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே. கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும். அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.

அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!

யோசிங்கப்பா........

Tuesday, November 2, 2010

தலையங்கம்: வரலாறு காணாத ஊழல்!

1,39,652,00,00,000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது.இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி - ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக - அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெüனம்?இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட "சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை.தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை.தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை.பிரச்னை நீதிமன்றப் படியேறியது. ""நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது'' என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும்.அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும்.இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம். ""அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும்.ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது.இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும்.ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்?ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆ. ராசா மீண்டும் அமைச்சராகி "நாளை மற்றுமொரு நாளே' என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடனும் முடித்துக் கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக் கொள்கின்றன; மக்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே...'!

Thursday, October 21, 2010

மணபந்தமின்றி சேர்ந்து வாழ்ந்தால் பராமரிப்பு தொகை உண்டு : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு



புதுடில்லி : "திருமண பந்தம் இல்லாமல், ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ்ந்த பெண், அந்த ஆணிடமிருந்து பராமரிப்புத் தொகை பெற வேண்டுமெனில், சில வரையறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அப்போது தான் பராமரிப்புத் தொகை பெற முடியும்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் ஏற்கனவே லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருந்தாலும், பச்சையம்மாள் என்ற பெண்ணுடன் திருமணம் ஆகாமல் சில ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார். இதனால், வேலுச்சாமி தன்னையும் திருமணம் செய்ததாகக் கூறி, தனக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் எனக்கோரி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் பச்சையம்மாள்.

இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல கோர்ட் மற்றும் சென்னை ஐகோர்ட், மனுதாரர் பச்சையம்மாளுக்கு, வேலுச்சாமி மாதம் 500 ரூபாய் பராமரிப்புத் தொகை தர வேண்டும் என, உத்தரவிட்டன. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வேலுச்சாமி மனு தாக்கல் செய்தார். மனுவில், தான் ஏற்கனவே லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும், பச்சையம்மாளை திருமணம் செய்யாமல் அவருடன் கொஞ்ச நாட்கள் சேர்ந்து வாழ்ந்ததாகவும் தெரிவித்தார். அதனால், பச்சையம்மாளுக்கு பராமரிப்புத் தொகை தர உத்தரவிட்டது தவறு என்றும் கூறினார்.

மனுவை விசாரித்த, நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ, டி.எஸ்.தாக்கூர் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் கூறியதாவது: திருமணம் ஆகாமல் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்ந்திருந்தனர் எனில், அவர்கள் கீழ்கண்ட வரையறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன் விவரம் வருமாறு:
1. கணவன், மனைவி போல அவர்கள் சேர்ந்து வாழ்ந்தது, சமுதாய அங்கீகாரம் பெறும் வகையில் தெரிந்திருக்க வேண்டும்.
2. திருமணமாவதற்குரிய சட்டப்பூர்வமான வயதை அடைந்தவர்களாக இருவரும் இருக்க வேண்டும்.
3. திருமணமாகாதவர்கள் என்பது மட்டும் அல்ல, சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்வதற்குரிய தகுதி உட்பட அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்க வேண்டும்.
4. அவர்கள் தாங்களாகவே ஒன்றாகச் சேர்ந்து வாழ வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு தம்பதியர் போல வாழ்ந்தனர் என்பது அடையாளப்படுத்தப்பட வேண்டும். இந்த வரையறைகளை பூர்த்தி செய்யாமல், வார இறுதியில் மட்டும் ஒன்றாக சேர்ந்திருப்பதோ அல்லது ஒரே ஒரு இரவு மட்டும் தங்கியிருப்பதையோ ஒன்றாக சேர்ந்து வாழ்ந்ததாக கருத முடியாது. குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் 2005ன் அடிப்படையில், பெண் ஒருவர் ஆணிடம் இருந்து பராமரிப்புத் தொகை பெற வேண்டுமெனில், திருமணம் செய்யாமலேயே அவர்கள் திருமணம் செய்தவர்களைப் போல வாழ வேண்டும். மேலும், சேர்ந்து வாழ்ந்ததை நிரூபிப்பதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.

ஒரு பெண்ணை, ஆணானவர் ஆசை நாயகியாக வைத்திருந்து, அவரின் பணத் தேவைகளை பூர்த்தி செய்தால், உடலுறவுக்காக மட்டும் அந்தப் பெண்ணை பயன்படுத்தினால் அல்லது ஒரு வேலைக்காரியாக மட்டும் பயன்படுத்தினால், அவர்கள் மணபந்தம் இல்லாமல், ஒன்றாக சேர்ந்து வாழ்ந்ததாகக் கருத முடியாது. பெண் ஒருவர் ஆணுடன் சேர்ந்து வாழ்ந்ததற்காக பராமரிப்புத் தொகை கோரினால், அவர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்யவில்லை என்றாலும், குறிப்பிட்ட கணவன், மனைவி போல வாழ்ந்திருக்க வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125ன் படி, சட்டப்பூர்வமான மனைவி, பெற்றோர் மற்றும் குழந்தைகள் மட்டுமே ஆண் ஒருவரிடம் இருந்து பராமரிப்புத் தொகை பெற முடியும். அதே நேரத்தில், குடும்ப வன்முறைச் சட்டத்தில், "குடும்ப உறவு' என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.  அதில், திருமணம் மூலமான உறவு மட்டுமின்றி, திருமணம் செய்தவர்களை போன்று ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தவர்கள் உட்பட அனைவரையும் குடும்ப உறவாக கருதலாம் என, கூறப்பட்டுள்ளது.

குடும்ப உறவு என்றால் என்ன என்பது பற்றி அந்த சட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவில்லை. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமான வழக்குகள் கோர்ட்டிற்கு வருவதால், "குடும்ப உறவு' என்றால், என்ன என்பதை விவரிக்க வேண்டியது அவசியம். இதற்கு ஒரு தீர்க்கமான முடிவும் காண வேண்டும். அதேநேரத்தில், இந்த வழக்கில் வேலுச்சாமியுடன் பச்சையம்மாள் கொஞ்ச நாட்கள் தான் சேர்ந்து வாழ்ந்தார் என்பதால், அவருக்கு பராமரிப்புத் தொகை வழங்க வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு பராமரிப்புத் தொகை வழங்கும்படி, குடும்ப நல கோர்ட் மற்றும் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

தினமலர் நாளிதழில் 22/10/2010 அன்று வெளியான செய்தி
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=111231

வரவேற்கிறேன்




நண்பர்கள் அனைவரையும் இரத்தின கம்பளம்  விரித்து எனது புதிய வலைபூவிற்கு வரவேற்கிறேன் ......