Thursday, October 21, 2010
மணபந்தமின்றி சேர்ந்து வாழ்ந்தால் பராமரிப்பு தொகை உண்டு : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
புதுடில்லி : "திருமண பந்தம் இல்லாமல், ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ்ந்த பெண், அந்த ஆணிடமிருந்து பராமரிப்புத் தொகை பெற வேண்டுமெனில், சில வரையறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அப்போது தான் பராமரிப்புத் தொகை பெற முடியும்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் ஏற்கனவே லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருந்தாலும், பச்சையம்மாள் என்ற பெண்ணுடன் திருமணம் ஆகாமல் சில ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார். இதனால், வேலுச்சாமி தன்னையும் திருமணம் செய்ததாகக் கூறி, தனக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் எனக்கோரி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் பச்சையம்மாள்.
இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல கோர்ட் மற்றும் சென்னை ஐகோர்ட், மனுதாரர் பச்சையம்மாளுக்கு, வேலுச்சாமி மாதம் 500 ரூபாய் பராமரிப்புத் தொகை தர வேண்டும் என, உத்தரவிட்டன. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வேலுச்சாமி மனு தாக்கல் செய்தார். மனுவில், தான் ஏற்கனவே லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும், பச்சையம்மாளை திருமணம் செய்யாமல் அவருடன் கொஞ்ச நாட்கள் சேர்ந்து வாழ்ந்ததாகவும் தெரிவித்தார். அதனால், பச்சையம்மாளுக்கு பராமரிப்புத் தொகை தர உத்தரவிட்டது தவறு என்றும் கூறினார்.
மனுவை விசாரித்த, நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ, டி.எஸ்.தாக்கூர் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் கூறியதாவது: திருமணம் ஆகாமல் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்ந்திருந்தனர் எனில், அவர்கள் கீழ்கண்ட வரையறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன் விவரம் வருமாறு:
1. கணவன், மனைவி போல அவர்கள் சேர்ந்து வாழ்ந்தது, சமுதாய அங்கீகாரம் பெறும் வகையில் தெரிந்திருக்க வேண்டும்.
2. திருமணமாவதற்குரிய சட்டப்பூர்வமான வயதை அடைந்தவர்களாக இருவரும் இருக்க வேண்டும்.
3. திருமணமாகாதவர்கள் என்பது மட்டும் அல்ல, சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்வதற்குரிய தகுதி உட்பட அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்க வேண்டும்.
4. அவர்கள் தாங்களாகவே ஒன்றாகச் சேர்ந்து வாழ வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு தம்பதியர் போல வாழ்ந்தனர் என்பது அடையாளப்படுத்தப்பட வேண்டும். இந்த வரையறைகளை பூர்த்தி செய்யாமல், வார இறுதியில் மட்டும் ஒன்றாக சேர்ந்திருப்பதோ அல்லது ஒரே ஒரு இரவு மட்டும் தங்கியிருப்பதையோ ஒன்றாக சேர்ந்து வாழ்ந்ததாக கருத முடியாது. குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் 2005ன் அடிப்படையில், பெண் ஒருவர் ஆணிடம் இருந்து பராமரிப்புத் தொகை பெற வேண்டுமெனில், திருமணம் செய்யாமலேயே அவர்கள் திருமணம் செய்தவர்களைப் போல வாழ வேண்டும். மேலும், சேர்ந்து வாழ்ந்ததை நிரூபிப்பதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.
ஒரு பெண்ணை, ஆணானவர் ஆசை நாயகியாக வைத்திருந்து, அவரின் பணத் தேவைகளை பூர்த்தி செய்தால், உடலுறவுக்காக மட்டும் அந்தப் பெண்ணை பயன்படுத்தினால் அல்லது ஒரு வேலைக்காரியாக மட்டும் பயன்படுத்தினால், அவர்கள் மணபந்தம் இல்லாமல், ஒன்றாக சேர்ந்து வாழ்ந்ததாகக் கருத முடியாது. பெண் ஒருவர் ஆணுடன் சேர்ந்து வாழ்ந்ததற்காக பராமரிப்புத் தொகை கோரினால், அவர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்யவில்லை என்றாலும், குறிப்பிட்ட கணவன், மனைவி போல வாழ்ந்திருக்க வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125ன் படி, சட்டப்பூர்வமான மனைவி, பெற்றோர் மற்றும் குழந்தைகள் மட்டுமே ஆண் ஒருவரிடம் இருந்து பராமரிப்புத் தொகை பெற முடியும். அதே நேரத்தில், குடும்ப வன்முறைச் சட்டத்தில், "குடும்ப உறவு' என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. அதில், திருமணம் மூலமான உறவு மட்டுமின்றி, திருமணம் செய்தவர்களை போன்று ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தவர்கள் உட்பட அனைவரையும் குடும்ப உறவாக கருதலாம் என, கூறப்பட்டுள்ளது.
குடும்ப உறவு என்றால் என்ன என்பது பற்றி அந்த சட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவில்லை. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமான வழக்குகள் கோர்ட்டிற்கு வருவதால், "குடும்ப உறவு' என்றால், என்ன என்பதை விவரிக்க வேண்டியது அவசியம். இதற்கு ஒரு தீர்க்கமான முடிவும் காண வேண்டும். அதேநேரத்தில், இந்த வழக்கில் வேலுச்சாமியுடன் பச்சையம்மாள் கொஞ்ச நாட்கள் தான் சேர்ந்து வாழ்ந்தார் என்பதால், அவருக்கு பராமரிப்புத் தொகை வழங்க வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு பராமரிப்புத் தொகை வழங்கும்படி, குடும்ப நல கோர்ட் மற்றும் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
தினமலர் நாளிதழில் 22/10/2010 அன்று வெளியான செய்தி
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=111231
Subscribe to:
Post Comments (Atom)

OH
ReplyDelete